
மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் உயிர் தோழியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்தவர் சசிகலா. நீண்ட காலமாக அரசியல் திரை மறைவில் இருந்து செயல்பட்டு வந்த அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நேரடி அரசியலில் களம் இறங்கினார்.
அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஜெயலலிதாவை “அம்மா” என்றும், சசிகலாவை “சின்னம்மா” என்றும் அழைத்து வந்தனர். 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது நிழலாக வலம் வந்த சசிகலா நிஜ அரசியல் பாதையில் அடியெடுத்தார்.
சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவி ஏற்ற சசிகலா, அதன் பின்னர் நடைபெற்ற கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பிப்ரவரி 7-ந் தேதி பதவி ஏற்க இருந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானது.
அந்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, சசிகலா உடனடியாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சிறை செல்லும் முன், எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக அறிவித்து விட்டு சென்றார்.
மாறிப்போன அரசியல் நிலைமை
4 ஆண்டு சிறை வாழ்க்கையை முடித்து வெளியே வந்த போது, தமிழக அரசியல் சூழல் முற்றிலும் மாறியிருந்தது. அ.தி.மு.க.வில் மீண்டும் தன்னால் செல்வாக்கு செலுத்த முடியாத நிலை உருவானது. இதனால், அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலா, தனது ஆதரவாளர்களை மட்டும் அவ்வப்போது சந்தித்து பேசிவந்தார்.
இந்த நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என சசிகலா தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை.
மீண்டும் அரசியல் பிரவேசம்
சமீபத்தில், அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிகலா, “தேர்தல் களத்தில் இறங்குவேன்” என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் அவர் மீண்டும் அரசியல் பிரவேசத்திற்கு தயாராகி வருவதாக தெரிகிறது.
அதற்கான வியூகங்களை, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து தற்போது சசிகலா வகுத்து வருகிறார். தனது சகோதரர் திவாகரன் நடத்தி வரும் அரசியல் கட்சியான அண்ணா திராவிடர் கழகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பு
ஜெயலலிதாவின் பிறந்த நாளான இம்மாதம் 24-ந் தேதி, மதுரையில் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்தி, தனது அரசியல் பிரவேசத்தை சசிகலா அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும் திட்டம்
மேலும், நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து, தென்மாவட்டங்களில் தனக்கு செல்வாக்குள்ள 25 தொகுதிகளில் ஆதரவாளர்களை களம் இறக்க சசிகலா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அரசியலில் எடப்பாடி பழனிசாமி எதிரியாக இருப்பது போல, தனது சகோதரி மகன் டி.டி.வி. தினகரனுடனும் சசிகலா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க., அ.ம.மு.க. கூட்டணி அமைத்துள்ளதால், தினகரனின் ஆதரவாளர்கள் சிலர் சசிகலா பக்கம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யுடன் சந்திப்பு
இந்த நிலையில், திவாகரனின் மகனும், அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞரணி செயலாளருமான ஜெய் ஆனந்த், நேற்று த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஜெயலலிதா பிறந்த நாளில் வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு, தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

