
கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரியில் நடைபெற்ற பாறைக்கோவில் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி அடுத்த எலத்தகிரி கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான பாறைக்கோவில் என அழைக்கப்படும் திருக்குடும்ப ஆலயத்தில், 122-வது ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் ஆலயத்தில் திருப்பலி பூஜை மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
நேற்று முன்தினம் காலை, மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயர் தலைமையில் திருவிழா திருப்பலி சிறப்பாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி மாலை நடைபெற்றது. திருத்தேர் பவனியை வட்டார முதன்மை குரு ஆல்பர்ட் வில்லியம் தொடங்கி வைத்தார்.
வண்ண மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட மூன்று திருத்தேர்களில், மிக்கேல் சம்மனசு, லூர்து மாதா, புனித சூசையப்பர், குழந்தை இயேசு மற்றும் தேவமாதா ஆகியோரின் திருவுருவங்கள் பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் வீதி உலா வந்தன.
திருத்தேர் பவனியின் போது வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


