
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கால பைரவர் கோவில்களில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன.
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடியில் அமைந்துள்ள கால பைரவர் கோவிலில், காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், கால பைரவர் மஹா ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.
தங்கக் கவச அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல் 12 மணிக்கு கால பைரவர் உற்சவம் மற்றும் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பூசணி, தேங்காய் மற்றும் எலுமிச்சையில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இந்த வழிபாடுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 165 கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டை தக்ஷிண கால பைரவர் கோவில் மற்றும் கந்திகுப்பம் கால பைரவர் கோவில்களிலும், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.


